×

வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் ஓட்டுனர்களுக்கு அரசு நிலத்தை வழங்க எதிர்ப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

வாலாஜாபாத், டிச. 25: வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் உள்ள, அரசு நிலத்தை அனைத்து அரசு துறை சார்ந்த ஓட்டுனர்களுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, இடத்தை அளவிட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி வாலாஜாபாத்தில் இருந்து படப்பை செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள அரசு நிலத்தை அனைத்து அரசு துறையை சேர்ந்த ஓட்டுனர்களுக்கு  பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்ய வந்த வாலாஜாபாத் தாசில்தார் மித்ராதேவி, வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். இதையறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள், பொதுமக்களிடம் சமரசம் பேசி, முற்றுகையிட்டதற்கான காரணத்தை கேட்டனர்.

அதற்கு, எங்கள் ஊரிலேயே ஏழ்மையான மக்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு சிறிய அளவு நிலம் கூட இல்லாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் எங்கள் அரசு நிலத்தை, எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு வழங்காமல், அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு வழங்குவது எந்த விதத்தில் நியாயம். அரசு துறை ஊழியர்களுக்கு நிலம் வழங்குவதை நாங்கள் தடுக்கவில்லை.

ஆனால், நிலம் இல்லாமல் உள்ள இந்த ஊர் மக்களுக்கு வழங்க அரசு ஏன் மறுக்கிறது என்றே கேட்கிறோம். எனவே, இங்கேயே வாழும் மக்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும். அதில் மீதமுள்ள இடத்தை தாரளமாக அரசு துறை ஊழியர்களுக்கு வழங்கட்டும் என்றனர். அதை கேட்ட அதிகாரிகள், முறையாக மாவட்ட கலெக்டரிடம் இந்த கருத்தை தெரிவியுங்கள். அதன் பின்னர், கலெக்டர் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் வரலாம் என்றனர். இதையடுத்து சுமார் 2 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...